விஜய் சேதுபதி படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது… விரைவில் ரிலீஸ் ஆகும் மாமனிதன்!

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் சேதுபதி தனது ஆஸ்தான இயக்குனரான சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா, இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். இந்தாண்டு பிப்ரவரி மாதமே இப்படம் முடிக்கப்பட்டுவிட்டது. படம் விநியோகம் குறித்த விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் படம் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

மாமனிதன் படத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள் வாங்கியதாகவும் எனவே விநியோக உரிமை தங்களுக்குத் தராததால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது.

அந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும் அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே படத்தை வெளியிடத் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

தடை அகற்றப்பட்ட நிலையில் மாமனிதன் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் குரு சோமசுந்தரம், பேபி அனிகா உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணையும் மூன்றாவது படமாகும்.

Leave a Comment

Your email address will not be published.