ஷாகித் கபூர் உடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி… பாலிவுட்டிலும் என்ட்ரி!

நடிகர் விஜய் சேதுபதி வெப் சீரிஸ் ஒன்றின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துவிட்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் கால் தடம் பதித்துவிட்டார். தற்போது பாலிவுட்டிலும் கால் தடம் பதிக்கத் தயாராகிவிட்டார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் உடன் வெப் சீரிஸ் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘தி பேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளனர். இதில் ஷாஹித் கபூர் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியும் இந்த வெப் சீரிஸில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாளவிகா மோகனன் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தயாரிப்பாளர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மும்பை மற்றும் கோவாவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி அறிமுகமாகும் முதல் வெப் சீரிஸ் இதுவாகும். இது ஆக்ஷன் திரில்லர் வெப் சீரிஸாக உருவாக இருக்கிறது.

இதற்கிடையில் விஜய் சேதுபதி மாமனிதன், கடைசி விவசாயி, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published.